தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தார் எடப்பாடி பழனிசாமி!

 
EPS and Governor

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக அரசு குறித்து புகார் மனு அளித்தார். 

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து  கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.  இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி  தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட புகார்களை  வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். 
 
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.  அப்போது சட்டம்-ஒழுங்கு, போலி மது, விஷ சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.