எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

 
ep

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமுதற் கடவுளாம், வினை தீர்க்கும் தெய்வமாம், ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கி எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.


கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், உளமார்ந்த "விநாயகர் சதுர்த்தி" வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.