பெண்மையை வணங்குவோம்! பெண்மையால் பெருமை கொள்வோம் - எடப்பாடி பழனிசாமி!

 
ep

அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'  என்கிற கவிஞர் பாரதியாரின் பொன்னான வரிகள் பலித்தது இந்தப் பாரினில், அந்த வகையில், பெண்ணின் பெருமையை இந்தப் பூவுலகிற்குப் பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரபஞ்சம் எனும் பேரியக்கத்தில்... “பெண் என்பவள் பொறுமையில் பூமாதேவி, அன்பை அள்ளித் தருவதில் அன்னை, குடும்பத்தில் மகுடம் சூட்டுபவள், ஆளுமையில் அரசி, ஆலோசனை கூறுவதில் ராஜதந்திரி” என பெண்களுக்குத் தனி இடமும், சிறப்பும் அளித்து உயர்த்தி வணங்குவது நம் இந்தியத் திருநாட்டின் பண்பாடும், பாரம்பரியமும் ஆகும். சர்வதேச மகளிர் தினமானது, ரஷ்யப் பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில், இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று, 1921-ல் மாஸ்கோ நகரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் பெண்களின் அகிலம் அமைப்பின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. 

EPS

அதில் இருந்துதான் உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச உழைக்கும் மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வாதிகார அரசுக்கு எதிராகத் தமது உரிமைகளை மீட்பதற்கான உழைக்கும் பெண்களின் புரட்சியை நினைவு கூர்வதற்காக உருவானதுதான் சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. உழைக்கும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதும், அனைத்துப் பணிகளிலும், அனைத்து நிலைகளிலும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதும்தான் சர்வதேச மகளிர் நாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தமாகும். ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை' என்கிற வாக்கியத்தை நிரூபிக்கின்ற வகையில், அவ்வையார், காரைக்கால் அம்மையார், 'கவிக்குயில்' சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, திருமதி இந்திராகாந்தி, முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, திருமதி ஃபாத்திமா பீவி போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய பெண் ஆளுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்கூட சிறந்த முன்மாதிரிகளாகவே விளங்கி இருக்கிறார்கள். ஏனென்றால், எத்தனையோ பெரிய நட்சத்திரப் பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் ஆளுமைகள் தமிழக அரசியலில் காலூன்ற தடுமாறிக் கொண்டிருந்த சமயத்தில், தமிழக மக்களாலும், ரத்தத்தின் ரத்தங்களான கழகத் தொண்டர்களாலும் 'அம்மா' என அன்போடு அழைக்கப்படுகின்ற, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா என்கிற ஆளுமை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு தமிழகத்தில் முத்திரை பதித்த தலைவராகி, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்கிற மாபெரும் மக்கள் பேரியக்கத்தை 50 ஆண்டுகால அரசியலுக்கு வித்திட்டு, நூறாண்டு காலம் மக்கள் பணியாற்றிய இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும் என்று தொலைநோக்குச் சிந்தனையோடு தெரிவித்த அம்மா அவர்களை இந்த நாடு எப்போதும் மறக்காது. மாண்புமிகு அம்மா அவர்கள் 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி வாகைசூடி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சியே மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுகின்ற கட்சியாக மாற்றியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்தச் சாதனையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் படைத்தார்கள். 

eps

பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்களின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் நாள் "சர்வதேச மகளிர் தினமாக" கொண்டாடப்படுகிறது. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இந்த நாளில் பெண்கள் அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கான தனி இடஒதுக்கீடு வழங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் . ஒரு நூற்றாண்டுக்கு முன், பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது. பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்! பெண்மையை வணங்குவோம்! பெண்மையால் பெருமை கொள்வோம்! மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.