உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்!

 
EPS

அதிமுக பொதுக்குழு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதன் தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.  இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன்,  முகமது சபீக் அமர்வில் நடைபெற்றது.  இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது ஏழு நாட்கள் நடைபெற்ற வாதம் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது.  ஜூன் 28ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

high court

இந்த நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகளை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் நிலைக்கத்தக்கதல்ல எனவ்வும், வழக்கில் தடை  விதிப்பதற்கு எந்த முகத்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

supreme court

இந்த நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்  செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.