ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

 
1

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.

இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.