அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி - விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு

 
ep

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. 

ops eps


 
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே வரும் 10 ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டவுடன் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.