அதிமுகவை அதளபாதாளத்திற்கு போய்விடும் - எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலகுவது நல்லது : புகழேந்தி

 
1

நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக வீசி வந்த அரசியல் புயல் ஓய்ந்திருக்கும் நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் திமுகவும் தேசிய அளவில் பாஜகவும் பெரு வெற்றி பெறும் என பெரும்பாலான ஊடகங்கள் கணித்திருக்கின்றன. லட்சக்கணக்கான மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளிவந்திருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது திமுக கூட்டணி கிட்டத்தட்ட 35 தொகுதிகளுக்கு மேலும் பாஜக 350 தொகுதிகளுக்கு மேலும் வெல்லும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதை அடுத்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளருமான புகழேந்தி இது தொடர்பாக தனது கருத்துக்களை கூறியுள்ளார். புகழேந்தி இது தொடர்பாக கூறியுள்ளதாவது:-

கருத்துக் கணிப்புகள் தான் தற்போது வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வரவில்லை. அப்படி கருத்துக்கணிப்புகள் உண்மை என்றாலும் இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று.. அதே நேரத்தில் திமுக 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றாலும் இரண்டு மூன்று தொகுதிகள் இழுபறி என்று செய்திகள் வருகிறது. அது நிச்சயம் ராமநாதபுரம் தொகுதி தான் அதில் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் பெருவெற்றி பெறுவார்.

எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்திருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் இந்த மக்களவைத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவுக்கு தோல்வி தான் கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஒரு மாநகராட்சி, நகராட்சி, யூனியனைக் கூட அதிமுகவால் கைப்பற்ற முடியாமல் போனதுக்கு எடப்பாடி பழனிசாமியின் மோசமான தலைமை தான் காரணம். ராமநாதபுரம் தேனியில் நிச்சயம் ஓபிஎஸ் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார்கள்.

அதிமுக வலுவாக இல்லை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் வலுவாக இல்லை. தற்போதைய தேர்தலில் தோல்வியடைந்த பின் அதிமுகவில் இருக்கும் தலைவர்கள் 2026ல் ஜெயிப்போம் என்று சொல்வார்கள். ஒரு வேலை பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைப் போல அதிமுக தோல்வியை சந்தித்தால் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து கிளம்பி விட வேண்டும். இனிமேலும் அவர் கட்சியில் தொடர்வது அதிமுகவை அதள பாதாளத்தில் தள்ளிவிடும். எனவே அவராகவே சென்று விடுவது நல்லது.. எதற்கெடுத்தாலும் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம் என சொல்லும் அவர் அனைத்து தோல்விகளுக்கும் பொறுப்பேற்று கட்சியை விட்டு செல்வதுதான் அதிமுகவுக்கு நல்லது. மேலும் இவர் தான் தலைமைக்கு வரவேண்டும் என்று இல்லை.. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் வரவேண்டும்.. அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அதிமுக வரும் தேர்தல்களில் வெல்ல முடியும்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காததற்கு காரணம் இருக்கிறது. தமிழக அளவில் திமுக பலம் வாய்ந்த கட்சியாக இருந்தாலும் தேசிய அளவில் இந்தியா கூட்டணி வலுவானதாக இல்லை. அதன் காரணமாகவே அவருக்கு காய்ச்சல் வந்து கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். தோல்வியடையும் கூட்டணி பக்கம் சென்றால் திமுகவின் இமேஜ் சரியும் என்பதன் காரணமாக கூட அவர் டெல்லி செல்லாமல் இருந்திருக்கலாம்.. அதே நேரத்தில் அவர் கட்சியின் பிரதிநிதி சென்று இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு தான் பிரதானமாக இருக்கிறது. இதனால் தான் திமுகவால் வெல்ல முடிந்தது. எக்ஸிட் போல் கணிப்பு உண்மையானால் எந்த கட்சியின் தயவு பாஜகவுக்கு தேவை இருக்காது.. ஒருவேளை திமுக பாஜக பக்கம் சென்றாலும் அது அவர்களுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும். பொதுமக்கள் திமுகவுக்கு எதிராகவே திரும்புவார். எனவே எந்த கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பை பிரதானமாக கொண்டிருக்க வேண்டும்.. பாஜக தாங்கள் தமிழகத்தில் காலூன்ற என்னென்னவோ செய்தாலும் அது இங்கு நடக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.