ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் தொழில் நிறுவனங்களை திமுக அரசு மிரட்டி வருகிறது - எடப்பாடி பழனிசாமி..!

சென்னையில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது. டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்கிடையே கார்பந்தயத்தை சென்னை நகருக்குள் நடத்த தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் பந்தயம் நடக்கும் பகுதியில் அரசு மருத்துவமனை இருப்பதால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதோடு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் என மனுவில் கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் கடுமையான புயல் மழை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு கூறியது. மேலும் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயத்தை ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்து கூட தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் அண்ணா சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு ஸ்பான்சர்ஷிப் தருமாறு தொழிக் நிறுவனங்களை திமுக அரசு மிரட்டி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் எழுதித் தந்துவிட்டு, கடந்த வாரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்களுக்கு ஃபார்முலா கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்துவதற்காக 'ஸ்பான்சர்ஷிப்' வேண்டி நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், விளையாட்டுத்துறை அனைத்து தொழிற்சாலைகளுக்கும், கார் பந்தயம் நடத்துவதற்குத் தேவையான நிதியினை பந்தய சாலை அபிவிருத்திக்காகவோ, உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவோ, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விளம்பரம் மூலமாகவோ ஸ்பான்சர் வழங்க கேட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விடியா திமுக அரசின் இந்த நிர்பந்தத்தால் பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன.
ஏற்கனவே தமிழகத்தில் விடியா திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பிற தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்து தொழிற்துறை முடங்கியுள்ள நிலையில், விடியா திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது." என கூறியுள்ளார்.