திமுகவை கண்டித்து பேரணி.. ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி..

 
ep


முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று, பேரணியாக சென்று  ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.  

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து  கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.  இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி  தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  

 ஆளுநர் ரவி

இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட புகார்களை  வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை  ( மே22) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து  மனு அளிக்க உள்ளார்.  இதற்காக சைதாப்பேட்டை சின்னமலை அருகில் இருந்து  முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி , பேரணியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் செல்ல இருக்கிறார்.  அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்கிறார்.  அ.தி.மு.க. பிரம்மாண்ட பேரணியில்  சென்னை மற்றும் புறநகரில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.