கணக்கு வழக்கு இல்லாமல் சும்மா எதையாவது எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் - அமைச்சர் மூர்த்தி..!
மதுரை மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, மாவட்டத்தைச் சேர்ந்தவரும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான மூர்த்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர் மூர்த்தி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். பத்திரப் பதிவுத் துறையில் கொள்ளை நடைபெறுவதாகவே மக்கள் பேசிக்கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி பத்து ரூபாய் அமைச்சராக இருந்தார். மூர்த்தி பத்து பர்செண்ட் அமைச்சராக உள்ளார். எங்கு எந்த பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சர் மூர்த்திக்கு பத்து சதவிகிதம் கமிஷன் வந்துவிட வேண்டுமாம்.. கமிஷன் தரவில்லை என்றால் சொத்துக்களை பதிவு செய்ய முடியாது. கஷ்டத்திற்கான சொத்துக்களை விற்பனை செய்பவர்களை இந்த அரசு கமிஷன் என்ற பெயரில் மேலும் கஷ்டப்படுத்துகிறது என்றார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் தோண்டி எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “பத்திரப் பதிவுத் துறையைப் பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அப்படி தவறாக பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக யாரும் குற்றம்சாட்டவும் இல்லை. அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது அன்றைக்கே நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள எந்த பத்திரப் பதிவு அலுவலகத்திற்கும் சென்று கள ஆய்வு செய்து பாருங்கள். பத்திரப் பதிவில் எந்த தலையீடும் இருந்தது இல்லை. அதிமுகவினர் பத்திரம் பதிவு செய்யச் சென்றபோது 10 சதவிகிதம் கமிஷன் வாங்கினார்களா என்று தெளிவுபடுத்திச் சொல்லுங்கள்.
ஒருநாளுக்கு 10 சதவிகிதம் என்றால் ஒரே நாளில் மட்டும் 270 கோடி வருமானம் அரசுக்கு வந்துள்ளது. அப்படியென்றால் 27 கோடியை ஒரே நாளில் கமிஷனாக பெற்றோம் என்று கூறுகிறாரா? கணக்கு வழக்கு இல்லாமல் சும்மா எதையாவது எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இது தவறானது. எந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் அப்படி கமிஷன் வாங்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அதுகுறித்து விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். எதையாவது சொல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.


