வீழ்த்த முடியாத பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் நிரூபணம்- எடப்பாடி பழனிசாமி

 
eps

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ep

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “
'கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது'

நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே! வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.

தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அஇஅதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். 


இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். “எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்..