அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி- எடப்பாடி பழனிசாமி

 
eps

பதிவான ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 192 வாக்குகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். 

eps

அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8 ஆயிரத்து 474 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றிருந்தார். த.மா.கா வேட்பாளர் யுவராஜைவிட தற்போது 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றுள்ளார். வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மண்டலத்திலேயே தென்னரசு பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும் மொத்தம் பதிவான வாக்குகளில் பாதியை கூட பழனிசாமி தரப்பால் பெற முடியவில்லை. 

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தவர்களுக்கு இதயபூர்வமான நன்றி. ஈரோடு கிழக்கு பார்முலா என்ற ஒன்றை உருவாக்கி மக்களை அடைத்துவைத்து ஜனநாயக படுகொலையை திமுக அறிமுகப்படுத்தியுள்ளது. திமுக அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில் விடியா திமுக ஆட்சி மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள்.  அதே வகையான ஜனநாயக படுகொலையை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் திமுக அரங்கேற்றியது” எனக் கூறியுள்ளார்.