உயிரிழந்த மகளின் உடலுக்காக அலைக்கழிக்கப்பட்ட தந்தை! பழனிசாமி கண்டனம்

 
mksTALIN EDAPPADI PALANISAMY

விடியா திமுக ஆட்சியில், சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் மரணமடைந்த மகளின் உடலுடன் அலைக்கழிக்கப்பட்ட தந்தைக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

eps

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த திரு. நிக்ஸன்-திருமதி கிருஷ்ணமாலா தம்பதியினர், தமது 14 வயதுடைய மகள் ஃபெமினாவுடன் கடந்த 14-ஆம் தேதி, தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள், அருவியில் குளித்துவிட்டு நடந்து சென்றுபோது, அங்கிருந்த ஒரு மரத்தின் கிளை முறிந்து ஃபெமினாவின் தலையில் விழுந்ததில் அவர் படுகாயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 15.5.2023 அன்று ஃபெமினாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சொந்த ஊரான சென்னைக்குக் கொண்டு செல்ல ஃபிரீசர் பாக்ஸ் வசதியுள்ள அரசு அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யப்படும் என்று கம்பம் மருத்துவமனை நிர்வாகம் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், திரு. நிக்ஸன் தனது உறவினர்கள் அனைவரையும் சென்னைக்கு அனுப்பிவிட்டு, தனது இறந்த மகளது உடலுடன் அரசு அமரர் ஊர்தியில் சென்னைக்குக் கொண்டுசெல்ல தான் மட்டும் கம்பம் மருத்துவ மனையில் தங்கியுள்ளார்.

கம்பம் அரசு மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் உள்ள அமரர் ஊர்தியில் இருக்கும் ஃப்ரீசர் பாக்ஸ் பழுதாகி உள்ளதால், முதற்கட்டமாக நீங்கள் இதில் புறப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றவுடன் அங்கு குளிர் சாதன வசதியுள்ள ஃபிரீசர் பாக்ஸ்-உடன் கூடிய அமரர் ஊர்தி தயாராக உள்ளது என்றும், அதில் நீங்கள் சென்னை சென்றுவிடலாம் எனவும் கூறி, திரு. நிக்ஸனை அவரது மகளின் பூத உடலுடன் மருத்துவமனையில் இருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.

chennai femina incident theni suruli falls 

ஆனால், தேனி அரசு மருத்துவமனையில் இருந்த அமரர் ஊர்தியிலும் ஃப்ரீசர் பாக்ஸ் சரியாக இயங்கவில்லை என்று கூறி, ஒப்புக்காக வேறொரு அமரர் ஊர்தியில் ஏற்றி திருச்சி வரை செல்லுமாறும், அங்கு வேறொரு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி பல மணி நேர காத்திருப்பிற்குப்பின், தேனி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், வண்டியில் செல்லும்போதே தேனி மருத்துவமனையின் அமரர் ஊர்தி ஓட்டுநர், திரு. நிக்சனை மிகவும் அவமரியாதையாகப் பேசியதுடன், திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தவுடன் இதற்குமேல் என்னால் வண்டியை ஓட்ட முடியாது என்று கூறி, அவரது இறந்த மகளின் உடலை இறக்கி வைத்துவிட்டார்.

ஏற்கெனவே மகள் இறந்த சோகத்துடன் உருக்குலைந்த நிலையில் மகளின் பூத உடலுடன் அமர்ந்திருந்த திரு. நிக்சனின் நிலையைப் பார்த்த மற்ற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்ததன்பேரில், சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பழுதடைந்த ஃபிரீசர் பாக்ஸ் உள்ள அமரர் ஊர்தியில் சென்னை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்து உயிரிழந்த தனது மகளின் உடலுடன், பழுதடைந்த ஃபிரீசர் பாக்ஸ் உள்ள மூன்று அமரர் ஊர்திகளில் மாற்றி மாற்றி, 20 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து சென்னையை வந்தடைந்தபோது, இறந்த ஃபெமினாவின் உடல் உப்பி உருக்குலைந்த நிலையில் இருந்ததைப் பார்த்தவுடன், ஏற்கெனவே பெருந்துயரில் இருந்த தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கொண்ணா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர் என்று திரு. நிக்சன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

EPS

உக்ரைனிலிருந்து தமிழர்களை மீட்கிறோம், சூடானில் இருந்து தமிழர்களை காப்பாற்றுகிறோம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த விடியா அரசு, சுற்றுலா சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில், தனது கண்முன்னே அன்பு மகளை இழந்த துயரமான நிலையில், தமிழ் நாட்டில் கம்பத்தில் இருந்து சென்னைக்கு ஒரு ஃபிரீசர் பாக்ஸ் வசதியுள்ள அமரர் ஊர்தியினை ஏற்பாடு செய்ய திறமை இல்லாத, இரக்கமற்ற இந்த வாய்ச்சொல் விடியா திமுக அரசு, மகளை இழந்து வாடும் திரு. நிக்சனுக்கு என்ன பதில் கூறப் போகிறது ?

இது போன்ற துயரமான சூழ்நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது. எனினும் இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட வனத் துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து, உடனடியாக பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பொதுமக்களை அலைக்கழிக்கும் நிர்வாகத் திறனற்ற இந்த விடியா அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த நிகழ்வில் தவறு செய்துள்ள அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் திரு. நிக்சன் குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். அன்பு மகளை இழந்து வாடும் திரு. நிக்சன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருக்கும் பழுதடைந்த வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகள், ஃப்ரீசர் பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.