பள்ளி சுவரில் மனித மலம்- குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குக: ஈபிஎஸ்

 
eps

எருமப்பட்டி அம்பேத்கர் நகரிலுள்ள அரசு துவக்கப் பள்ளியின் சுவர் & சமையலறை பூட்டில் சமூக விரோதிகள் மனித மலம் பூசியது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விடியா ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Image


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவற்றிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது எனில், இந்த விடியா ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஏற்கனவே வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிசெயல் ஏற்பட்டபோது, அதற்கான உரிய நீதியை இந்த விடியா அரசு நிலைநாட்டியிருந்தால், இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது. 

எங்கு மைக் கிடைத்தாலும் "சமூகநீதி" என்று வாய்கிழிய முழங்கிவிட்டு, அதனை தனது விடியா ஆட்சியில் நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திராவிடத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே தனது வெற்று விளம்பரத்திற்காக மட்டும் உதட்டளவில் பயன்படுத்தும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். அரசுப்பள்ளி வளாகத்தில் மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.