தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது- ஈபிஎஸ்

 
edappadi palanisamy

சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணங்களை வழங்கினார். 

DMK rode on false promises to capture power in Tamil Nadu, says AIADMK  leader Edappadi K Palaniswami

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையினால் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்லையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கிட முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர் மாவட்டத்திற்கு வந்தார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை கிராமத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 500 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வேட்டி, சேலை, போர்வை அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்குவதற்காக வந்துள்ளேன். அதிமுக ஆளும்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி. பொதுமக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாகும். அதிமுக என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதே ஏழைகளுக்காகத்தான். டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பருவமழை எப்பொழுதெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது அப்போதெல்லாம் கடலூர் மாவட்டம் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்ட மக்களை காப்பாற்ற பல்வேறு திட்டங்களையும், வடிகால் வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

ஆதனூர் - குமாரமங்கலம் இடையே 500 கோடி ரூபாய் செலவில் கதவனை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர விவசாயிகளுக்கு எண்ணற்ற பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம்.  வறட்சி ஏற்பட்டபோதும் வறட்சிக்காக நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசுதான். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி, கொரோனா காலத்தில் நிவாரண உதவி, 5 ஆண்டு ஆட்சியில் இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி, ஆடு மாடு போன்ற கால்நடை வளர்ப்புக்கான திட்டங்கள், அம்மா கிளினிக் மூலம் மருத்துவ திட்டம் என அனைத்து நல்ல பல திட்டங்களையும் அதிமுக அரசு கொண்டு வந்தது. ஆனால் திமுக அரசு எல்லா திட்டங்களையும் ரத்து செய்து மூடி விட்டது. ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை எல்லாம் திமுக அரசு ரத்து செய்து விட்டது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்க 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசுதான். பொங்கல் பரிசாக பணம், பரிசு பொருட்கள் கொடுத்தோம். ஆனால் திமுக அரசு கொடுத்த நிவாரண பொருட்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 

மடிக்கணினி திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற போன்ற பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது. ஒவ்வொன்றையும் திமுக அரசு ரத்து செய்து வருகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது, ஏழைகள் எப்பொழுதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அதிமுக களத்தில் இன்று கை கொடுக்கும்” எனக் கூறினார்.