பேரவையில் பேச விட்டிருந்தால் கிழி கிழி என கிழித்திருப்பேன்- எடப்பாடி பழனிசாமி

 
எடப்பாடி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டும், சட்டமன்றத்தில் இருந்து அதிமுக MLA-களை இடைநீக்கம் செய்ததை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “உண்ணாவிர போராட்டத்திற்கு ஆதரவளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக், செ.கு தமிழரசன், ஹைதர் அலி, நாம் தமிழர் தலைவர் சீமான் ஆகியோருக்கு நன்றி. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தால், பல உயிர்களை இழந்துவிட்டோம். கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இன்று வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி பேச வாய்ப்பு கேட்டும், பேரவை தலைவர் அனுமதி அளிக்கவில்லை.

Image

தொடர்ந்து மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்று முறையாக மனு அளித்து, அதன் மீது பேச வாய்ப்பு கேட்டோம். எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அதன் பிறகு பதிலளிக்கலாமே? கேள்வி நேரத்திற்கு பிறகு இதை எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள். ஆனால் எங்களை வெளியேற்றிவிட்டு முதல்வர் ஸ்டாலின் 15 நிமிடம் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேசுகிறார். கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு பக்கம் மாவட்ட ஆட்சியர், இன்னொரு பக்கம் திமுக MLA என இருவரும், அதை வதந்தி என்றும், தவறான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள். இந்த ஆட்சியின் அவல நிலை இதுதான். ஒரு அமைச்சர் நான் சட்டமன்றத்தில் இருந்திருந்தால் கிழித்திருப்பேன் என்று கூறுகிறார். நான் பேசுவதை நேரலை ஒளிபரப்பு செய்திருந்தால் கிழி கிழி என்று கிழித்திருப்பது நன்கு தெரியும். யாருக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. இன்று பாதிக்கப்பட்டர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் கூட இல்லை.

அதிகார மமதையில் பேசுகிறார்கள். 40க்கு 40ம் வென்றுவிட்டதால், அதிமுகவினரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2014ல் நீங்கள் என்ன நிலையில் இருந்தீர்கள்? சக்கரம் சுழன்றுக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். நாங்கள் அரசியல் செய்வதாக ஸ்டாலின் சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என்றார். எங்கள் எம்.எல்.எ செந்தில்குமார் அனைவரிடமும் முறையிட்டார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கெஞ்சினார். இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிததார்.” என்றார்.