பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக FIR பதிவானது எப்போது? ஈபிஎஸ்-க்கு முதலமைச்சர் சவால்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்கள் கழித்தே FIR பதிவு செய்தீர்கள், நான் சொல்வது தவறு என்றால் நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க தயார் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மனசாட்சி இன்றி பெண்களின் பாதுகாவலர்கள் போல் பேசுகிறவர்கள் 'பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். அந்த சம்பவத்தில் அதிமுக அரசு எந்த 'நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக பல பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தது. பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்கள் கழித்தே FIR பதிவு செய்தீர்கள், நான் சொல்வது தவறு என்றால் நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க தயார். பொள்ளாச்சி சம்பவத்தில் நீங்கள் உங்களது வாதத்தை நிரூபிக்காவிட்டால் நான் சொல்லும் தண்டனையை ஏற்க தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
பொள்ளாச்சி வழக்கில் 24 மணி நேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக இபிஎஸ் கூறிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்த நிலையில், சவாலை ஏற்றுக்கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மேலும் 24.2.2019ல் பொள்ளாச்சியில் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து 25/2/2029ல் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.