அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'அம்மா மினி கிளினிக்' திறக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி..!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், "அதிமுகவை எதிர்க்க தில், திராணி, தெம்பு திமுகவுக்கு இல்லை. அப்படி தில் இருந்தால், எங்கள் நிர்வாகத்தை பற்றி பேசுங்கள். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் போட்டி, எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு அடிமை என பேசுகிறார் ஸ்டாலின்.
திமுக ஆட்சியை அகற்ற நடக்கும் தேர்தல் இது. அதை மறந்துவிட்டு டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்கும் தான் போட்டி என்கிறார். இது என்ன கிரிக்கெட்டா? நடைபெறவிருப்பது சட்டமன்ற தேர்தல். இங்கு அரசியல் பேச வேண்டும். கிரிக்கெட்டை பற்றி பேசக் கூடாது.
அன்றைக்கு ஒரு கூட்டத்தில், காரில் செல்லும் போது கிரிக்கெட் பார்ப்பேன் என ஸ்டாலின் கூறுகிறார். மக்கள் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல், கிரிக்கெட் பார்க்கும் முதலமைச்சர் நமக்கு தேவைதானா?
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் பற்றி கூட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியாது. மக்கள் படும் கஷ்டத்தை அவர் உணர மாட்டார். ஏன் தெரியுமா? அவர் பிறந்தது முதல் செல்வ செழிப்பில் வளர்ந்தவர். ஆனால், நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கஷ்டம் என்றால் என்ன, வறுமை என்றால் என்ன என உணர்ந்து வளர்ந்தவன்.
அதனால்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பேன் என நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலினோ கூப்பன் தருவேன் என்கிறார்.
கூப்பன் கொடுத்தால்தானே ஊழல் செய்ய முடியும். மக்களின் பணத்தை எந்தெந்த வகையில் சுருட்ட முடியுமோ அந்தந்த வழிகளில் சுருட்டும் கட்சி திமுக.
அதிமுக ஆட்சியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு, இன்று 3000 பேர் மருத்துவக் கல்லூரியில் பயில்கின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'அம்மா மினி கிளினிக்குள்' தொடங்கப்பட்டன. ஆனால் ஆட்சி மாறியதும் அவற்றை எல்லாம் ஸ்டாலின் மூடிவிட்டார்.
ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்தான் இந்த ஸ்டாலின்.
ஒரு குடும்பத்திற்காகவே இயங்கும் கட்சிதான் திமுக. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என இங்கு உறுதியளிக்கிறேன்.
அதேபோல, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடிமராமத்து திட்டம் தொடரும். விவசாயிகள் இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில் என்ன நடக்கிறது? கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் தான் குற்றம் அதிகரித்திருக்கிறது. இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீரழிகிறது.
பாலியல் வன்கொடுமை நடக்கவும் கஞ்சா போதை ஆசாமிகள் தான் காரணம். அதிமுக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் தமிழகத்தில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார் என உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததால்தான், முரசொலிமாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தார்.
உதயநிதி அவர்களே உங்கள் தாத்தா கூட்டணி வைத்தால் சரி. நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா? நாம் சொல்வதற்கு முன்பே நரேந்திர மோடி மிகவும் நல்லவர் என புகழாரம் சூட்டியவரே கருணாநிதிதான் (செய்தித்தாளை எடுத்து காட்டுகிறார்). குஜராத்தில் மோடி நல்லாட்சி வழங்கினார் என கூறியவர் கருணாநிதி. ஆனால், இப்போது சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற திமுக நாடகம் போடுகிறது" என எடப்பாடி பழனிசாமி பேசினார்.



