நாங்கள் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கஞ்சாவை வேரோடு அழிப்போம் - எடப்பாடி பழனிசாமி உறுதி..!
காஞ்சிபுரம் தேரடிச் சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
"திமுகவும், காங்கிரஸும் தொகுதிப்பங்கீடு செய்தது தொடர்பாக 20 நாட்களாக பேசியும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இருந்தது. திமுகவில் இருந்து காங்கிரஸ் விலகிவிடும் என்றும் கூறினார்கள். அதன்பிறகு தான் கூட்டணி சேர முடிந்தது. ஆனால் அதிமுக கூட்டணிக் கட்சியினரிடம் இரண்டு மணி நேரத்தில் பேசி தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டோம். தேர்தல் அறிக்கையைக் கூட உடனுக்குடன் வெளியிட்டோம்.
திமுகவுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக துதிபாடிய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு கடந்த தேர்தலைவிட ஒரு தொகுதி குறைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிமுக கூட்டணிக் கட்சியினரோடு இணைந்து ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது; சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கஷ்டப்பட்டு உருவாக்கிய அதிமுகவில் முதலமைச்சர் பதவி உட்பட பல்வேறு உயர் பதவிகளில் இருந்த ஒருவர் இப்போது திமுகவில் இணைந்துவிட்டார். எம்ஜிஆரால் தீய சக்தி என்று சொல்லப்பட்ட கட்சியில் அவர் இணைந்திருப்பது கேவலமாகவே அவருக்கு தெரியவில்லை," என்று ஓபிஎஸ்ஸை மறைமுகமாக சாடினார்.
"மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூபாய் 1,000 தருவோம் என்று கூறினார்கள். அந்த தொகையை ஆட்சிக்கு வந்தவுடன் கொடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தனர். அதிலும் முதலில் 25 லட்சம் பேருக்கு மட்டும் தான் கொடுத்தனர். நாங்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் இன்று அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது," என்று இபிஎஸ் கூறினார்.
அத்துடன், "2021 தேர்தல் அறிக்கையிலேயே மாதந்தோறும் ரூபாய் 1,000 மகளிருக்கு வழங்குவோம் என்று அதிமுக சார்பில் முதலில் அறிவித்திருந்தோம். அதை அப்படியே காப்பியடித்து திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி மக்களும் வாக்களித்து ஆட்சிக்கும் வந்துவிட்டது திமுக. தற்போது அதிமுக சார்பில் மாதந்தோறும் ரூபாய் 2,000 வழங்குவதாக அறிவித்திருக்கிறோம். தமிழ்நாடு கடனில் இருக்கும்போது எப்படி கொடுக்க முடியும் என்று கேட்டபோது ஆழத்தெரியாதவன் தான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று பதில் கூறினேன்," என்று இபிஎஸ் கூறினார்.
தந்தையும், மகனும் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். மக்களைப் பற்றி எதுவும் பேசவில்லை என்று ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் மறைமுகமாக விமர்சித்த இபிஎஸ், தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்திப் பேசினால் நான் அவர்களை எதிர்த்து 10 மடங்கு அதிகமாகப் பேசுவேன் என்று எச்சரித்தார்.
அதிமுக, பாஜகவுக்கு அடிமையாகிவிட்டது; அமித் ஷா சொல்வதைத் தான் கேட்பார் என்கிறார்கள் என்று தன் மீதான விமர்சனத்தை சுட்டிக்காட்டி பேசிய இபிஎஸ், தனக்கு சுயமாக யோசிக்கும் திறன் இருக்கிறது. யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றார்.
தனிப்பட்ட நபருக்காக மக்கள் வரிப்பணத்தை பல கோடி செலவுச் செய்து சென்னை நகரில் கார் பந்தயம் நடத்தியவர் தான் உதயநிதி என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது என்று கூறியவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் தமிழ்நாட்டில் கஞ்சாவை வேரோடு அழித்துக் காட்டுவோம். தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என்று கூறினார்.



