"10 மணி நேரத்துல 3 மணி நேரம் தான் மக்கள் பிரச்சனை!" – தவெக, திமுக மோதலால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி..!

 
EPS

சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் ஏற்பட்டது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போதும் பிரச்னை ஏற்படுவதால் மக்களின் பிரச்னையை முழுமையாக பேச முடியவில்லை. திமுக பேச முற்படும்போது அக்கட்சி மீது அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். இதற்கு திமுக பதில் சொல்கிறது. இப்படி மாறி மாறி பதில் சொல்லி அவையின் 1 மணி நேரம் வீணடிக்கப்படுகிறது. சபாநாயகர், இரு தரப்பிலும் சமாதானபடுத்திய பிறகு திமுக பேச ஆரம்பிக்கும்போது அமைச்சர் ஒருவர் எழுந்து திமுக, திமுக அரசு மீது குற்றச்சாட்டை சுமத்துவதால் ஒரு பிரச்னை உருவாகிறது. அதில் ஒரு மணி நேரம் வீணடிக்கப்படுகிறது.

இப்படி ஒரு நாள் 10 மணி நேரம் சட்டசபை நடப்பதாக அறிவிக்கிறார்கள். பெருமையாக சொல்கிறார்கள். ஒரு நாள் சட்டமன்றம் 10 மணி நேரம் நடக்கிறது என்றால் 3மணி நேரம் தான் மக்கள் பிரச்னை பற்றி பேசப்படுகிறது. எஞ்சிய நேரம் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி பேசி அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.

இதனால், எங்களைப் போல் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை. அப்படியே கருத்துகளை தெரிவித்தாலும் அமைச்சர்களிடம் உரிய பதில் கிடைப்பதில்லை. எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விக்கு, ஒரு சில அமைச்சர்கள் தான் துறை சார்ந்து பதிலை சொல்கிறார்கள். எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விக்கு மூன்று அமைச்சர்கள் தான் பதில் சொல்கின்றனர். மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. இதனால் எந்த பயனும் இல்லை.அந்தந்த துறை அமைச்சர்கள் அந்த துறை சம்பந்தப்பட்டு பதில் சொல்லும்போது தான் தீர்வு கிடைக்கும். இதுதான் வரலாறு. ஆனால், தவெக ஆட்சியில் சட்டசபை நிகழ்வுகளால் எம்எல்ஏக்கள் கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை. பதில் இல்லைகாவல்துறை மானியக்கோரிக்கையில் நான் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லவில்லை. பதிலுரையில் மேலோட்டமாக தான் பேசுகிறார். எம்எல்ஏக்கள் கேள்விக்கு பதில் இல்லை. ஒரே ஒரு பதிலை தான் சொன்னார். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். அதுவும் எப்போது நிரப்பப்படும் எனத் தெரியவில்லை.எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேட்ட எந்தகேள்விக்கும் முதல்வர் பதில் சொல்வதில்லை. 45 ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். அவையில் கலாட்டா நடக்கிறது. என்றைக்கோ நடந்தது. பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர்.