எங்கள் வெற்றி கூட்டணி பார்த்து ஸ்டாலினுக்கு பயம்: எடப்பாடி பழனிசாமி..!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மொடக்குறிச்சி தொகுதிக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை என்றும், திமுக அளித்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானவையே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டு நடைபெற்று வருகிறது. ஆனால், மொடக்குறிச்சி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தேர்தல் சமயத்தில் திமுக 525 வாக்குறுதிகளை அளித்தது. அதில் சுமார் 10 சதவீத வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக தெரிவித்தனர். ஆனால் உயர்த்தவில்லை. சம்பளம் உயர்த்துவதாக தெரிவித்தனர். ஆனால் உயர்த்தவில்லை. ஏற்கெனவே பணி செய்த அந்த நாட்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்க முடியாத அவல நிலை உள்ளது. அதிமுக மேற்கொண்ட முயற்சியால் மத்திய அரசு 2,999 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதனை பெற்றுத் தந்த கட்சி அதிமுக. ஆட்சி அதிகாரத்தில் திமுக உள்ளது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கி கட்டுப்படுத்தினோம். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து அன்றாடம் அதிகம் செய்தி வெளியாகி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அதிமுக எச்சரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்துள்ளது. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்தது அமலாக்கத் துறை சோதனையில் தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்.
"பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கட்சி யாருடன் வேண்டுமானலும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இருந்தாலும், ஓட்டுப்போடுவது மக்கள் தான். கூட்டணி கட்சிகள் ஓட்டுப்போடாது. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புவதால், அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவர் பதவி வழங்க வேறு யாரும் கிடைக்கவில்லை. நூற்றாண்டு விழா கண்ட காங்கிரஸ் கட்சியில், பல கட்சிக்கு சென்று வந்தவரையே தலைவராக்கியுள்ளனர். அந்தக் கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு இடமில்லை. ஆனால், திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறாரோ அவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பதவி வகிக்கிறார். ஆகவே காங்கிரஸ் கட்சி தலைவரே மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் நம்புகிறார்கள். அதனால் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.


