டெல்லிக்கு எடப்பாடி பயப்படுகிறார்.. டெல்லியோ அமெரிக்காவுக்குப் பயப்படுகிறது - கோவையில் கனிமொழி கடும் தாக்கு..!
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து கனிமொழி நேற்று இரவு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
"வேட்பாளர் சூரிய பிரகாஷ், அன்னை சோனியா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராகுல் காந்தியால் உங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர். அவரிடம் பேசியபோது, கல்லூரி காலத்திலிருந்தே மதவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசியலில் இணைந்ததாகக் கூறினார். நாட்டை மதத்தால் பிரிக்க நினைக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை வீழ்த்தத் துடிக்கும் இவரைப் போன்ற இளைஞர்களின் கையில் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்."
தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். "மணிப்பூரில் அவர்கள் மூட்டிய தீ இன்னும் அணையவில்லை. ஆனால், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட அவர்கள் தொட முடியாது என்பதை இந்தத் தேர்தல் உணர்த்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி டெல்லியைப் பார்த்து பயப்படுகிறார், ஆனால் டெல்லியோ அமெரிக்காவைப் பார்த்து பயப்படுகிறது. வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றும் இவர்கள், சிலிண்டர் விலை உயர்வு மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி மாநில உரிமைகளை நசுக்குகிறார்கள்," எனச் சாடினார்.
கோவைக்கான வாக்குறுதிகள்
மத்திய அரசு கோவைக்கான மெட்ரோ திட்டம் மற்றும் கல்வி நிதியை முடக்கி வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய கனிமொழி, திமுக மீண்டும் பொறுப்பேற்றதும் தொகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார்:
குறுந்தொழில் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் அரசு சார்பில் விவசாயம் மற்றும் கால்நடை கண்காட்சிகள் நடத்தப்படும்.
வெளிமாவட்டத் தொழிலாளர்களுக்குத் தங்கும் விடுதிகள் மற்றும் வார்டு வாரியாக விளையாட்டு மைதானங்கள் கட்டித் தரப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தனி நடவடிக்கை எடுக்கப்படும்.
"சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பதே திமுகவின் தாரக மந்திரம். மாநில உரிமைகளையும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கக் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்," என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

