அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சீனியர்களுடன் எடப்பாடி சமரச முயற்சி

 
eps

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஏற்பட்ட பின்னடைவு இன்னும் முழுமையாக சரியாகவில்லை. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் சிலர் கட்சியைவிட்டு விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது, கட்சியின் உட்பகையை வெளிப்படையாக காட்டியது.

சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் முடிவுகளுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்காதது இந்த முரண்பாட்டை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த சூழலில், கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்க எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடியாத நிலையில், சில நம்பகமான தலைவர்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில், “கட்சியை விட்டு சென்றவர்கள் திரும்ப வேண்டுமா?” என்ற கேள்வியிலும் அதிமுகவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால், தற்போது உள்ளவர்களை ஒருங்கிணைப்பதே முதன்மை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.