மக்களை ஏமாற்றவே, நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
Apr 4, 2025, 12:26 IST1743749811059

மக்கள் பிரச்சினைகள் குறித்து பேரவையில் பேச வாய்ப்பு வழங்குவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தூய்மை பணியாளர்கள் போர்வையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதுமா? குற்றவாளிகள் அன்றைய தினமே ஜாமினில் வருகின்றனர்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து தெரியாமல் அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் கவனஈர்ப்பு மீது பேசப்படுவதில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேரவையில் பேச வாய்ப்பு வழங்குவதில்லை. மக்களை ஏமாற்றவே, நீட் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம். இளைஞர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் தான் அனைத்துக் கட்சி கூட்டம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து பிறகு கூறுவோம் என கூறினார்.