ஜெர்மனிக்கு எதிரான வரலாற்று வெற்றி எதிரொலி; ஈகுவடாரில் ஒரு நாள் பொது விடுமுறை..!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்திய நிலையில் ஈகுவடார் முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம். வெற்றியை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்தார் அதிபர் டேனியல் நொபோவா.
2026 பிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற வலிமைமிக்க ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஈக்வடார் வீழ்த்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாடே கொண்டாடும் விதமாக, இந்த தற்காலிக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய 23-வது பிஃபா உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவில், உலகில் மிகவும் விலையுயர்ந்த இந்தக் கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் தொடரில் கோப்பையை வெல்லும், முனைப்பில் அணிகள் மிகத்தீவிரமாக விளையாடி வருகின்றன.இந்தத் தொடரின் ’இ’ பிரிவில் ஈக்வடார், ஜெர்மனி அணிகள் இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஈக்வடார் அணி 2-1 என்ற கணக்கில் வலிமைவாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.
இதன் மூலம், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈக்வடார் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்திய ஈகுவடாரின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து அதிபர் டேனியல் நோபோவா உத்தரவிட்டுள்ளார்.

