ஜன.19ல் அனைத்துக் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை..

 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ஜனவரி 19 ஆம் தேதி  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில்  அண்மையில்  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.   விரைவில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேர்தல்

இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்தல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரை செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதேபோல்  வார்டு  இடஒதுக்கீடு செய்யும்  பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும்  வார்டு வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலையும்  சமீபத்தில் வெளியிட்டது.

தேர்தல்

இந்நிலையில் தமிழ்நாடு மாநில  தேர்தல் ஆணையம், ஜனவரி 19-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும்,  தேர்தல் ஆணையர் தலைமையில் ஜன 19 அன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.