அதிகாலையில் பயங்கரம்..! கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி வெட்டி கொலை..!
சென்னை ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதி கேசவன். பிரபல ரவுடியான இவர் மீது கொளத்தூர், ராஜமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே, ஆதி கேசவனின் மனைவி பிரசவத்திற்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக ஆதி கேசவன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் வந்துள்ளார்.
மனைவியை பார்த்து பேசிவிட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் பின்புறம் ஆதி நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இன்று அதிகாலை தலைக்கவசம் அணிந்தபடி மருத்துவமனைக்குள் 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று வந்தது.
அவர்களை பார்த்த ஆதி கேசவன், தன்னை தேடி தான் அந்த கும்பல் வந்துள்ளது என தெரிந்து, அங்கிருந்து ஓடினார். ஆனால், அவரை விரட்டி சென்ற கும்பல், மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே அவரை வெட்டிக் கொலை செய்தது.
பின்னர் அவர் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள காவலர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழ்பாக்கம் போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே, ரவுடி ஆதிக்கும், அவரது மனைவி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, ரவுடி ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


