“முதல்வர் மருத்துவமனையில் இருந்து நேரலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்”- துர்கா ஸ்டாலின்

 
k k

எனது கணவர் ’உங்களில் ஒருவன்’ நான் ’உங்களில் ஒருத்தி’ என துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், துர்கா ஸ்டாலின் எழுதியுள்ள ‘அவரும் நானும்’ பாகம் - 2 நூலை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார். முதல் பிரதியை டாபே குழுமத்தின் நிர்வாக இயக்குநர், தலைவர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். இதில் கலந்துகொண்டு உரையாற்றிய துர்கா ஸ்டாலின், “நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழ்நாடு முதலமைச்சராக, கட்சித் தலைவராக அவருக்கு பல்வேறு பணிகள் இருந்தாலும், ஒரு கணவராக எனக்காக நேரம் ஒதுக்கி, இந்த நூலை முழுமையாக படித்து, எனக்கு ஆலோசனைகள் வழங்கினார் அவர். மேலும் இந்நூலுக்கு அன்பு உரையும் அவரே எழுதிக் கொடுத்தார். அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த விழாவிற்கு அவரால் வரமுடியாவிட்டாலும், அவரது மனம் முழுக்க இங்குதான் இருக்கும். மருத்துவமனையில் இருந்து நேரலையில் முழு நிகழ்ச்சியையும் கண்டுகொண்டிருக்கும் என் கணவருக்கு மீண்டும் நன்றி ‘கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு சென்று நல்லபடியாக நடத்திவிட்டு வா’ என்று வாழ்த்தி அனுப்பியது அவர்தான்.

2010ல் தளபதி நானும் என்று நூல் வெளிவந்தது, இந்தத் தொடரை பார்த்து என்னை பாராட்டுவார் எனது அத்தை, அவராலும் வர முடியவில்லை. அவருடைய வாழ்த்து என்றும் எனக்கு இருக்கும், ஒவ்வொரு துறையிலும் திறந்து விளங்கும் பெண்மணிகள் இங்கு வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு முழு முதல் காரணம் என் கணவர் தான் அதற்காக அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், மனம் முன் வந்து நீ எழுது துர்கா என்று என் கணவர் சொல்லியதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. பேரக்குழந்தைகள் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது ஒரு பாட்டியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்பு முத்தங்களை பேர குழந்தைகளுக்கு பரிசாக தருகிறேன். எங்களுடைய 50 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றை உணவுப்பூர்வமாக என்னுடைய முன்னோட்ட பார்வையில் கூறியிருக்கிறேன்” என்றார்.