களத்தில் இறங்கிய துர்கா ஸ்டாலின்- மீனவ கிராமங்களில் வாக்குசேகரிப்பு
பூம்புகார் தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உதய சூரியனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய அரசியல் தலைவர்களும் ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சியின் மதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து உதயசூரியன்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நிவேதா எம்.முருகனை ஆதரித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட கடலோர பகுதிகளில் உள்ள வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த துர்கா ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.மீண்டும் திமுக அரசு அமைவதற்காக நீங்கள் அனைவரும் உறுதியாக ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மீனவ பஞ்சாயத்தார்கள் மீனவ மக்கள் இருந்தனர்.



