“அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் 2-வது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜகவின் ஆசை”- துரை வைகோ
அதிமுகவை பலவீன படுத்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜகவின் ஆசை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், “த.வெ.கவில் இணைவது என்பது செங்கோட்டையன் எடுத்த முடிவு . அவரின் தனிப்பட்ட விருப்பம், அது அவரது உரிமை. த.வெ.கவில் செங்கோட்டையன் இணைவதால் அதிமுகவிற்கு பலமா? பலவீனமா? என்பதை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெரும் வாக்குகளை பொறுத்து சொல்ல முடியும். அதிமுகவை பலவீன படுத்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜகவின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை பிளவுபடுத்தி அதிமுகவை பலவீனப்படுத்தி , அதற்கு மாற்று சக்தியாக பாஜக வரவேண்டும் என்பது அந்த இயக்கத்தின் விருப்பம். அதனால்தான் இதை எல்லாம் நாம் பார்க்கிறோம், இதில் மாற்று கருத்து இல்லை.
சட்டமன்றத் தேர்தல் சீட் , கூட்டணி குறித்து நான் முடிவெடுக்க முடியாது. மதிமுக தலைவர் வைகோ மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இருவரும் பேசிய முடிவு எடுப்பார்கள். ஒரு இயக்கத்தின் அடையாளம் என்பது அந்தக் கட்சியின் கொடி சின்னம் தான். எங்களுடைய சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது மதிமுக தொண்டர்கள் விருப்பம். இது குறித்து கூட்டணி பேச்சுவார்த்தையின் போது சுமுகமாக பேசி முடிவெடுக்கப்படும். SIRயை தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்க்கின்றன. SIRயை எதிர்க்கவில்லை, அதை அமல்படுத்தும் முறையை தான் எதிர்க்கிறோம். SIR பணியினால் அரசு ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் 16க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்
SIR எதுக்காக கொண்டு வரப் போட்டதோ அந்த நோக்கம் நிறைவேறப்போவதில்லை . SIRக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மதுரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் பிற கட்சிகள் ஆட்சி செய்தால் நீங்கள் கொடுக்க மாட்டீர்களா ? அதிலேயே அவர்களின் அரசியல் கால் புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் நலன் உரிமைகளுக்காக அவரது கூட்டணியில் இருக்கும் பாஜகவிடம் தங்களது கருத்துக்களை சொல்லலாம். தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும்போது அவருடைய கூட்டணி கட்சியிடம் எடப்பாடி பழனிச்சாமி தங்களது கருத்துக்களை வலியுறுத்தலாம்” என்றார்.


