"மாநில தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை பொய் சொல்கிறார்"- துரைவைகோ

திருச்சி விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் தொழுவதற்கான பிரத்தியேக அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை திருச்சி எம்பி துரை வைகோ திறந்து வைத்தார் தொடர்ந்து அவர் அங்கு தொழுகையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, “தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாததால், நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. ஃபெஞ்சல் புயல் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு தனிநபர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிதியாக ரூ.6,675 கோடி கேட்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.
இந்தியாவிலேயே சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தைமிகச் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலம் தமிழகம் தான். இத்திட்டத்திற்கான பலவற்றை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆயினும் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய 2,000 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை. திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கிட வேண்டும். சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் இந்த பணிகளுக்கான நிதியை மத்திய அரசு தாமதமாக வழங்கியது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்துவோம். திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு கையாளும் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் பெரும்பாலும் சிறிய ரக விமானங்கள் வந்து செல்வதால் சரக்குகளை அதிகம் கையாளமுடியாத சூழல் நிலவுகிறது. எனவே பெரிய ரக விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இலவசங்கள் குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப் பட்டுள்ளது. டெல்லியில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு
மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. இந்த சூழலில் அண்ணாமலை இலவசங்கள் குறித்து எவ்வாறு விமர்சனம் செய்யலாம்? ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மீது சிலர் நம்பிக்கை வைத்தார்கள், ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் தற்பொழுது தவிடு பொடியாக உள்ளது. நாளுக்கு நாள் அவரின் செயல்பாடுகளும் அறிக்கைகளும் மோசமாக சென்று கொண்டுள்ளது. மத்திய அரசு நிதி கொடுக்கிறது.. இங்குள்ளவர்கள் அதை மறைக்கிறார்கள் என அண்ணாமலை கூறுகிறார். மாநில தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை பொய் சொல்கிறார்” என்றார்.