3 வருஷமா அமைச்சரா இருக்கீங்க இன்னுமா அதெல்லாம் பாக்கல? பேரவையில் பரபரப்பு விவாதம்

 
துரைமுருகன்

ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தில் அமைந்து இருக்கிறதா என்பதை மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்யவில்லையா என பேரவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் மானிய கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்த அமைச்சர் மதிவேந்தனிடம் கேள்வி எழுப்பினார். 

வனத்துறை மானிய கோரிக்கையின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா கேள்வி எழுப்பினார். இதில்  யானை வழித்தடங்கள் குறித்து அமைச்சர் பேசினார். ஆனால் பல யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றும், கோவையில் ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தை முழுமையாக மறைத்துள்ளார்கள் என பேசினார். 

இதற்கு  அமைச்சர் மதிவேந்தன் பதில் அளித்து பேசுகையில்  யானை வழித்தடம் குறித்து  முழுமையான தகவல் யாருக்கும் தெரிவதில்லை. இதை தெளிவுபடுத்த வேண்டும் எண்ணத்தில் தான் யானை வழித்தடம் குறித்து பேசுகிறேன். உடனே அவை முன்னவர் துரை முருகன் பேசும்போது , ஈஷா யோகா மையம் காப்புக்காடுகளை எல்லாம் தானாக பிடித்துக் கொண்டு கட்டிடங்கள் கட்டிக்கொண்டு யானை வழித்தடத்தை மறைத்துள்ளதாக செய்தித்தாள்களில் செய்தி வருகிறது. இதற்கு நேரடியாக உறுப்பினர் பதில் கேட்கிறார் என குறுக்கிட்டு பேசினார். 

பின்னர் அவை முன்னவருக்கு பதில் அளித்த அமைச்சர் மதிவேந்தன், ஈஷா யோகா மையம் குறித்து முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகு பதில் தெரிவிக்கப்படும். ஆய்வு செய்து அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் பேசிய அவை முன்னவர் துரைமுருகன் நீங்கள் பதவியேற்று மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்யவில்லையா என கேட்டார்.