பெண் போலீஸ் இடுப்பை கிள்ளிய திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

 
duraimurugan

சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது, இந்தக் கூட்டத்துக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் இடுப்பை தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரும் கிள்ளியதாக பாதிக்கப்பட்ட காவலர் விருகம் பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சம்பந்தபட்ட இருவரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் கூட்ட நெரிசலில் தங்களது கை பெண் போலீஸ் மீது தவறுதலாக பட்டிருக்கலாம் என்றும், தங்களுக்கு அதுபோன்ற நோக்கம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் பெண் போலீசிடம் அவர்கள் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர். அதேபோல் பெண் போலீசும் தான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என எழுதிக்கொடுத்ததை அடுத்து காவலர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்த்துவைத்தனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்குப்பகுதி, 129-வது வட்டத்தை சேர்ந்த எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கட்சி கட்டுபாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.