பிரசாந்த் கிஷோரின் கட்சியே படுதோல்வி- துரை வைகோ

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ,திருமண வைபவத்தை நடத்தி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய துரை வைகோ, “மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்ட நிலையில், அது நீக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் துணை முதல்வர் ஆகியோரிடத்தில் எனது கோரிக்கையை வைத்தேன். அந்த கோரிக்கையின் பலனாக தற்போது முதல்வர் அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று தற்போது தமிழக அரசு ரத்து செய்துள்ளது. முதல்வர் அவர்களுக்கு எனது நன்றி. சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் இருந்து வரக்கூடிய வேளையில், பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று பிளாஸ்டிக் லைட்டர்களுக்கான உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயார் செய்யப்படுகிறது. அவற்றை விற்பனை செய்வதற்கு நமது தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலிருந்து திமுகவை உடனடியாக அகற்ற வேண்டும் என விஜய் கூறுகிறார். விஜய்யை பொறுத்தவரை மிகப் பெரிய ஒரு நட்சத்திரம், அவர் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவருடைய கொள்கை சித்தாந்தத்தை சொல்லியிருக்கிறார், அதை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் மக்களிடம் செல்ல வேண்டும்...உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களை அவர் சந்திக்க வேண்டும், அதை வைத்து தான் அவருடைய அரசியல் எதிர்காலம் இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவராக அவர் அவருடைய கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்! வரக்கூடிய தேர்தலில் மக்கள் அதற்கான தீர்ப்பை கொடுப்பார்கள்... பீகாரில் பிரசாந்த் கிஷோரின் சொந்த கட்சியே படுதோல்வி அடைந்தது. தமிழகம் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்தில் உடன்பாடு இல்லை. யார் பணம் கொடுத்தாலும் அந்த கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் பணியாற்றுவார்” என்றார்.