மருத்துவரின் அலட்சியத்தால் பிரசவித்த குழந்தை கீழே விழுந்து பலி

 
baby leg baby leg

திருவள்ளூரில் அரசு  மருத்துவமனையில் மருத்துவரின்  அலட்சியத்தால் பிரசவித்த ஆண் சிசு  கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Baby


திருவள்ளூர் மாவட்டம் அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்(36)- சந்தியா (24 ) தம்பதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தியா கர்ப்பமடைந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான சந்தியா,  கடந்த வாரம் ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 8-ஆம்  தேதி பிரசவ வலியால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த சந்தியாவை அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்தனர். பின் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அன்று இரவு சந்தியாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் வைத்து அவருக்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை வெளியேறும் போது அதிக வேகத்தில் வெளியேறியதால் குழந்தையை பிடிக்காமல் மருத்துவர்கள் கீழே தவறி விட்டதால் குழந்தைக்கு தலையில் அடிபட்டதாகவும், பின்னர் ஒரு வாரம் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து ஆக்சிஜன் உதவியுடன் ஒரு வாரம் சிகிச்சை அளித்து வந்ததாகவும்  கூறப்படுகிறது.

தினந்தோறும் சந்தியா குழந்தை முகத்தை பார்க்கும் போது எந்த வித அசைவும் இன்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக இன்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் பிறகு  தவமாய் பெற்றெடுத்த ஆண் குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் கீழே விழுந்து பலியாகிவிட்டதாகவும், மருத்துவர்கள் நாடகமாடி தங்களை ஏமாற்றி ஒரு வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்ததாகவும் குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.