குடிபோதையில் சாலையில் படுத்துக்கொண்டு இளம்பெண்கள் ரகளை

 
வாலாஜாபேட்டை குடிபோதையில் பெண்கள்

சென்னை வாலாஜா சாலையில் குடிபோதையில் ரகளை செய்த 6 இளம்பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. 


திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எல்லிஸ் சாலை சந்திப்பில்  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்  பழனி  தலைமையில் நேற்றிரவு  இரவு 21.00 மணி முதல் இன்று காலை 07.00 மணி வரை வாகன தணிக்கை நடைபெற்றது. வாகன தணிக்கை  நடைபெற்ற இடத்தின் எதிரே தனியார் பார் உள்ளது. நள்ளிரவு 12.10 மணியளவில் அங்கு குடித்து விட்டுவெளியே வந்த ஆறு இளம்பெண்களும் போதை தலைக்கேறி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்.

வாகன தணிக்கையிலிருந்த காவலர்கள் சென்று தடுத்து விசாரித்ததற்கு, 6 இளம்பெண்களும் காவல்துறையினரிடம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசினர். பின்னர் சாலையில் படுத்து மாநகர பேருந்து செல்ல முடியாமல் இடையூறு  செய்தனர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுஆறு இளம் பெண்களையும் காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். 

பிடிபட்ட மூன்று பெண்களை மட்டும் வாகனத்தில் ஏற்றி திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு குடி போதை சான்றிதழ் பெற அழைத்து சென்று சான்றிழ் பெற்றுக்கொண்டு காவல் வாகனத்தில் 02.45 மணியளவில் அவர்கள் வீட்டருகே போலீசார் இறக்கிவிட்டனர். இன்று  18.03.23-ம் தேதி காலை 10.00 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் மூன்று பேரும் வரவில்லை. இதையடுத்து போதையில் ரகளை ஈடுபட்ட இளம்பெண்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த இளம் பெண்கள் அனைவரும் சுப நிகழ்ச்சிகளுக்கு உணவு பரிமாறும் வேலைக்கு செல்பவர்கள் என்பது, நேற்று வேலைக்கு சென்று விட்டு மது அருந்திவிட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதும் தெரியவந்தது.