இலங்கையில் 22 புத்த பிட்சுகளிடம் ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

 
ட்

இலங்கை தலைநகரம் கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.  சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள "குஷ்" மற்றும் "ஹேஷ்" (Hash) வகை போதைப்பொருட்களுடன் 22 பௌத்த துறவிகள் இன்று காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

​போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (ஏப்ரல் 25) இரவு முதல் இன்று அதிகாலை வரை தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது தாய்லாந்திலிருந்து திரும்பிய இந்தத் துறவிகளின் உடைமைகளைச் சோதனையிட்டபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளிக்கூட உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்குள் மிகவும் ரகசியமாக போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 110 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறவியின் பயணப்பையிலும் தலா 5 கிலோகிராம் போதைப்பொருள் இருந்துள்ளது.

இவர்கள் கடந்த 22-ம் தேதி ஒருவரின் நிதியுதவியுடன் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் துறவிகளுக்கான உடைகளைக் களைந்துவிட்டு, சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களது செல்போன்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. "கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில், பௌத்த துறவிகள் குழு ஒன்று இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருளுடன் பிடிபடுவது இதுவே முதல்முறை," என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 22 பேரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.