"உன் பொண்டாட்டி உயிரோட இருக்கமாட்டா".. ரயிலில் பயணிகளை மிரட்டிய இளைஞர்கள்

 
train

சென்னை - ஆலப்புழா  ரயிலில் வந்த பெண் உள்ளிட்ட பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், பயணி ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி ரமா மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் இருந்து சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில்  கோவை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் ரயில் ஈரோடு வந்த போது இவர்கள் இருந்த எஸ்.10 கோட்சில்  6 இளைஞர்கள் ஏறியுள்ளனர். பின்னர் அவர்கள் ரயிலில் சத்தமாக பாடல் போட்டுக்கொண்டு  புகைப்பிடித்துக்கொண்டே வந்ததாக  தெரிகிறது. இது குறித்து ரமா அந்த இளைஞர்களிடம் குழந்தைகள் இருப்பதாக கூறி  புகைப்பிடிக்க வேண்டாம் என  கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். 

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த சுரேஷ்குமார், சகோதரர் மணிகண்டன் ஆகிய இருவரும் இளைஞர்களிடம் கேட்ட போது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். ரயில்வே பாதுகாப்பு உதவி எண்ணிற்கு அழைத்து புகார் அளித்த நிலையில் இளைஞர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கினர். அப்போது மீண்டும் ரயில் பயணிகளுக்கு மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதையடுத்து ரயில் போத்தனூர் ரயில் நிலையம் வந்த போது  ரயில்வே போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் தங்கள் எல்லைக்கு வராது என்றும் திருப்பூர் ரயில்வே போலீஸில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். ரயில் பயணிகளை தாக்கி  கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.