காரை பதட்டத்தில் ஓட்டிய பெண்... வெடவெடத்துப்போன டி.ஆர்.ஓ.
நாமக்கல்லில் பெண் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட காரில் ஏறி பயணம் செய்த போது காரினை பெண் சரியாக இயக்காததால் டி.ஆர்.ஓ அதிர்ச்சி அடைந்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மானியத்தில் பெண் பயனாளிகளுக்கு கார், ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி இன்று (17-11-2025) நடைபெற்றது. இதில் தமிழகத்தில் முதன் முறையாக ஒரு இலட்சம் மானியத்துடன் கூடிய கார் நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியை சேர்ந்த பெண் ஓட்டுநர் கோகிலா மற்றும் 5 பெண்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சரவணன் வழங்கினார். அப்போது திடீரென மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மானியத்தில் வழங்கப்பட்ட காரில் ஏறி அமர்ந்து கொண்ட அவர் பயனாளியான கோகிலா வை ஆட்சியர் அலுவலக போர்டிகோ வரை காரை இயக்க சொன்னார்.

காரினை இயக்கிய கோகிலா தட்டுத் தடுமாறி போர்டிகோ விற்கு செல்லாமல் முன்பாக உள்ள தடுப்பில் காரின் டயர் மோதி நின்றதால் காரில் இருந்து இறங்கிய வருவாய் கோட்டாச்சியர் சரவணண் ஒன்றுமே சொல்லாமல் நேரடியாக ஆட்சியர் அலுவலகத்தில் சென்றுவிட்டார். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலர் இந்திரா கோகிலாவை அழைத்து ஏன் பதட்டம்?, சரியாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஓட்டுநர் பயனாளிக்கு வழங்கிய காரில் பயணம் செய்த டி.ஆர்.ஓ வையே வெட வெடக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


