'டிரைவர் Is A Real Hero' : சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் பஸ்சில் தீ; உயிர் தப்பிய 50 பேர்..!
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே கேரள பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில், ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டாவை சேர்ந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ -- மாணவியர் 36 பேர், ஆசிரியர்கள் 4 பேர் என, 40 பேர் சுற்றுலா பஸ் மூலம் கொடைக்கானலுக்கு வந்தனர். பஸ்சை திருச்சூர் வடசேரி பாறைஹவுஸ் பகுதி செவிக், 41, ஓட்டினார். பஸ், தேனி மாவட்டம், தேவதானப்பட்டி புல்லக்காபட்டி விலக்கு அருகே வந்த போது, பின்பக்க டயர் வெடித்தது. டயர் அச்சு ரோட்டில் உராய்ந்து ஏற்பட்ட தீப்பொறி பற்றியது. பஸ் தீப்பற்றி எரிய துவங்கியதால், டிரைவர் பஸ்சை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
ஆசிரியர்கள், மாணவர்களை பஸ்சில் இருந்து வெளியே அனுப்பினார்.மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன் மேற்பார்வையில் பெரியகுளம், தேனி, வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.பஸ் எரிந்த போது ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதியில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
தேவதானப்பட்டி போலீசார் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

