"மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக இதை செய்திடுக" - தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை!!

 
tn

காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:-

தென்னகத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவரும் காவிரி பாசனப் பகுதியின் வேளாண்மைக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் நாள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழமையான நடைமுறையாக உள்ளது. 

jawahirullah

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், ஏரிகள்,வாய்க்கால்கள்,கிளை வாய்க்கால்கள்ஆகியவற்றில் உரியத் திட்டமிடலுடன் தூர்வாரும் பணிகளை  உடனடியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

பலமிழந்துள்ள தரைப்பகுதிகளைக் கண்டறிந்து அங்குப் பலப்படுத்தும் பணிகளையும், மதகுகள் மற்றும் ரெகுலேட்டர்கள் ஆகியவற்றின் தரத்தைப் பரிசோதனை செய்து தேவைப்படும் இடங்களில் உரிய மராமத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

jawahirullah

ஆற்றங்கரை மற்றும் வாய்க்கால் கரைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கும், முக்கிய விசேச நாள்களில் சடங்குகளில் ஈடுபடுவோருக்கு ஏதுவாக தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புடன் கூடிய படித்துறைகளையும் அமைத்திடத் தமிழக அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு விரைந்து செய்திட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.