‘திராவிட மாடல் அரசுக்குப் பெருமை’ - தங்கம் தென்னரசு..!
சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது திராவிட மாடல் அரசுக்கு பெருமை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில், மத்திய சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளம் எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள கீழடிக்கு விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், ₹18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை” என்று குறிப்பிட்டுள்ளார்.