மீண்டும் தலைதூக்கும் வரதட்சணை கொடுமை : ஐடி கணவர் மீது பெண் வரதட்சணை புகார்..!
மதுரை கீழபனங்காடியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்கும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், மீண்டும் உறவினர்கள் சமாதானத்தின் பேரில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அப்போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட நகை, பணம், சீர்வரிசை என அனைத்தும் பெண் வீட்டு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவியும் கோபாலகிருஷ்ணனும் பெங்களூருவில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
அங்கு கோபாலகிருஷ்ணன் ஸ்ரீதேவியை அவரது தாய், தந்தையர் உள்ளிட்ட உறவினர்களோடு பேசவிடாமல் அடித்து துன்புறுத்தியதாகவும், மேலும் தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து வரதட்சணையாக மேலும் 10 லட்சம் ரூபாய் கொண்டு வர வேண்டும் என கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீதேவி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீதேவியின் கணவரான ஐடி ஊழியர் கோபாலகிருஷ்ணன், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரிகள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 498 (ஏ), (கணவன் மற்றும் கணவனின் உறவினர்களால் கொடுமைக்கு ஆளாதல்) 406 ( ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்தை தவறாக பயன்படுத்துவது அல்லது மோசடி செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


