மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை : இளம்பெண் தற்கொலை..!

 
1

காரைக்கால் பகுதியில் கணவனின் சந்தேகத்தால் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி கிரீன் கார்டன் 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் ஹேமா (28). ஹேமாவுக்கும், கும்பகோணம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வ முத்துக்குமரன் (31) என்பவருக்கும் இருவீட்டுப் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

செல்வ முத்துக்குமரன் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.  திருமணத்துக்கு பிறகு ஹேமா கணவருடன் பெங்களூரு சென்று விட்ட நிலையில் ஹேமா மீது செல்வ முத்துக்குமரன் சந்தேகப்பட்டு, அவர் வேலைக்கு செல்லும் போது வீட்டுக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளார். ஹேமாவின் செல்போனை வாங்கி உடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தனது தாய் குமாரியிடம் ஹேமா கூறி, அழுதுள்ளார்.

இது குறித்து முத்துக்குமரனின் தாயிடம் குமாரி கூறினார். அவர் பெங்களூரு சென்று கணவன், மனைவியை சமாதானம் செய்து, ஹேமாவை அழைத்து வந்து ஆடி மாதத்துக்காக அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். கணவரின் கொடுமையால் மன வருத்தத்தில் இருந்த ஹேமா இரவு அனைவரும் தூங்கிய பிறகு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இது குறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் குமாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காரைக்கால் துணை தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். கணவனின் சந்தேகத்தால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.