போரூர் - வடபழனி இடையே டபுள் டக்கர் மெட்ரோ வழித்தடம்- சோதனை ஓட்டம் வெற்றி
போரூர் - வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

சென்னை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கி.மீ தொலைவிற்கான 4 வது வழித்தடத்தில் ஏற்கனவே பூந்தமல்லி முதல் போரூர் வரை 10 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்று போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னையில் முதன்முறையாக போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே முதல் டபுள் டக்கர் மெட்ரோ வழித்தடம் அமைந்துள்ளது. இதேபோன்று மெட்ரோ ரயில் பாதையில் முதன்முறையாக 5 டிராக்குகளும் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளன
போரூர் முதல் வடபழனி வரை ஏறத்தாழ 7 கி.மீ தூரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. போரூர் முதல் வடபழனி வரையிலான பாதையில் ஏற்கனவே ரயில் என்ஜின் சோதனையும் நடத்தப்பட்டு ரயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்றும் பெறப்பட்டுவிட்டது. UP LINE, DOWN LINE என இரண்டு தடங்கள் உள்ள நிலையில், போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ சோதனை ஓட்டத்தில் டவுன்லைனில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு UP LINE தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமையவுள்ளன. மொத்தம் 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம் பாலமாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


