திரைப்படங்களுக்கு முழுக்கு இல்லையா..? மீண்டும் நடிக்க தயாராகும் தளபதி விஜய்..!
நடிகர் விஜய், த.வெ.க.,வை துவங்கிய பின், 'ஜனநாயகன்' படத்தில் நடித்தார். இதுதான், தன் கடைசி படம் எனவும் அறிவித்த விஜய், இசை வெளியிட்டு நிகழ்ச்சியை, மலேஷியாவில் மிகப்பெரிய அளவில் நடத்தினார். ஆனால், 'சென்சார்' வாரிய பிரச்னையால், படத்தை திட்டமிட்டபடி, பொங்கலுக்கு 'ரிலீஸ்' செய்ய முடியவில்லை.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கும் நடந்ததால், 'ரிலீஸ்' தள்ளிக் கொண்டே போனது. பின், நீதிமன்ற உத்தரவுபடி, 'ஜனநாயகன்' படம் மறு தணிக்கை செய்யப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாலும், தேர்தலில் விஜய் போட்டியிடுவதாலும், படத்தை 'ரிலீஸ்' செய்ய, தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில், 'ஜனநாயகன்' படம், இணையதளத்தில் சட்ட விரோதமாக கடந்த வாரம் வெளியானது. இதனால், பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், ஓ.டி.டி., தளத்துக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜயின் உதவியாளர் ஜெகதீஷும் இணை தயாரிப்பாளர் என்பதால், விஜய் தரப்பும் நஷ்டமடைந்துள்ளது.எனவே, இதை ஈடுசெய்ய, தேர்தலுக்கு பின் விஜய் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, விஜய் வீட்டில் ஆலோசனை நடந்துள்ளது. அதில், 'தேர்தலில், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கான பெரும்பான்மை நமக்கு கிடைக்காது. நஷ்டத்தை ஈடுகட்டவும், கட்சியை நடத்தவும் பெரும் நிதி தேவைப்படுகிறது. எனவே, ஒரே நேரத்தில் அரசியல், சினிமாவில் ஈடுபடலாம்' என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.தேர்தல் முடிவு வெளியான ஓரிரு வாரத்துக்குள், விஜயின் அடுத்த படத்துக்கான பூஜை நடக்க வாய்ப்பு உள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



