உன் வீட்டில் அம்மா, தங்கச்சி இல்லையா? என கேட்ட ஒரே காரணத்திற்காக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! – ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்டதில் துண்டான இடது கை!

 
1

மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் நைகான் (Naigaon) ரயில் நிலையத்தில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி மாலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. போரிவலியில் இருந்து நைகான் நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, அதே ரயிலில் பயணித்த 53 வயதான ஜிதேந்திர கிரிஜப்பா ஹிர்முகே என்பவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

ரயில் நைகான் நிலையத்தை அடைந்ததும், அந்தப் பெண் கீழே இறங்கி ஜிதேந்திராவிடம் இது குறித்துத் தட்டிக்கேட்டுள்ளார். அப்போதும் அவர் தொடர்ந்து அத்துமீறியதால், "உன் வீட்டில் தாய், சகோதரி யாரும் இல்லையா?" என அந்தப் பெண் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் தனது காலணியால் அவரை அடிக்க முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஜிதேந்திரா, தனது செருப்பால் அந்தப் பெண்ணைத் தாக்கியதுடன், அவரைப் பலமாகத் தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய அந்தப் பெண், ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடையே தண்டவாளத்தில் விழுந்தார்.

தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு (Platform) ஏற அந்தப் பெண் முயற்சித்தபோது, துரதிர்ஷ்டவசமாக ரயில் நகரத் தொடங்கியது. இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி, அந்தப் பெண்ணின் முழங்கைக்குக் கீழே இடது கை துண்டானது. அங்கிருந்த பயணிகளும் போலீசாரும் உடனடியாக அவரை மீட்டு வசாயில் உள்ள ஜன்சேவா மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தச் சூழலைப் பயன்படுத்தி ஜிதேந்திரா அங்கிருந்து தப்பியோடினார்.

முதலில் இது ஒரு தற்செயலான விபத்து என்றே கருதப்பட்டது. ஆனால், நவம்பர் 6-ஆம் தேதி மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அந்தப் பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்திலும், வீடியோ பதிவிலும் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதற்கிடையில், சம்பவம் நடந்த சில நொடிகளில் குற்றவாளி ஜிதேந்திரா நைகான் ரயில் நிலையத்திலிருந்து சாவகாசமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதையடுத்து பயந்தர் ரயில்வே போலீசார் (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். நைகான் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திராவை நவம்பர் 9-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

ஆரம்பத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பெண்ணின் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவித்தல் (பிரிவு 74) மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் (பிரிவு 117(2)) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கில் கொலை முயற்சி (பிரிவு 109) பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஜிதேந்திரா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.