உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கலையா..? ஆன்லைனில் மேல்முறையீடு செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அண்மையில் 2ம் கட்டமாக விரிவாக்கம் செய்தது. 1.13 கோடி பேர் பயனாளிகளாக இருக்கும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் இருந்து 17 லட்சம் பேரை அரசு தேர்வு செய்தது.இப்போது மொத்தம் 1,30,69,831 பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக அதிகரித்திருக்கின்றனர்.
அதேநேரத்தில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பல பெண்களுக்கு அரசிடமிருந்து முறையான அப்டேட் இன்னும் செல்லவில்லை. இதனால், தங்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் https://kmut.tnega.org/kmut-grievance/ என்ற பக்கத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2ம் கட்டமாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த முறையீட்டை செய்ய முடியும். இரண்டு விதமான முறையீடுகளை செய்யலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தேன், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற ஆப்சனும், எஸ்எம்எஸ் வந்தது ஆனால் பணம் வரவில்லை என்ற என்ற ஆப்சனும் இருக்கும். இதில் நீங்கள் முறையீட விரும்பும் ஆப்சனை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நபரின் குடும்ப அட்டை எண், அதில் இருக்கும் மொபைல் எண் அவசியம். அந்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி செல்லும். அதனை உறுதி செய்த பிறகே இந்த மேல்முறையீட்டை செய்ய முடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து, பணம் வரவில்லை என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆன்லைனில் முறையிடவும். அரசிடமிருந்து உங்களுக்கான அப்டேட் கிடைக்கும்.


