CM விஜய் போட்டோவுக்கு கீழே உட்கார விருப்பமில்லையா? சீட்டை மாற்றிய நெல்லை திமுக மேயர்..!
திருநெல்வேலி மேயர் அறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தது.
இந்த நிலையில், தற்போது திருநெல்வேலி மேயர் இராமகிருஷ்ணன் அறையில் அவரது இருக்கையின் பின்புறம் முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படத்துடன், முன்னாள் முதலமைச்சர்களான டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், மேயரின் மேசையின் முன்பகுதியில் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
மேயர் தனக்கான இருக்கையில் அமராமல் சிறப்பு விருந்தினர்கள் வருகை தரும் போது அமரும் அந்த இருக்கையை தன்னுடைய அன்றாட பணிக்கு மாற்றி உள்ளார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையும் அந்த பகுதியில் நடத்தும் வகையில் மேயரின் இருக்கையை மாற்றி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “என்னுடைய அறையில் முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் முதல்வரின் புகைப்படத்தை நான் வைக்கவில்லை” என்றும் “அரசு கட்டிடம், அரசு அலுவலர்கள் தான் வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள முதலமைச்சரின் புகைப்படத்திற்கு கீழ் அமர்ந்து பணியாற்ற விரும்பவில்லையா என்ற கேள்விக்கு, “அப்படி எதுவும் கிடையாது என்னுடைய தலைவர் என்னை உருவாக்கியவர் மு க ஸ்டாலின் அவர்கள் அருகே அமர்ந்து பணியாற்றுகிறேன்” என்று குறிப்பிட்டார். மேலும் அதன் காரணமாகத்தான் இருக்கையை மாற்றி உள்ளதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் இதனால் அலுவலகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

