"வேட்பாளர்களுக்கே இங்கு ஓட்டு இல்லையா?!" – மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெளியான திடுக்கிடும் உண்மை!

 
1

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தனித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தொகுதி முழுவதும் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறும் நிலையில், வாக்குச்சாவடி மையங்களைச் சுற்றி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மதுராந்தகம் இடைத்தேர்தலில் முக்கிய வேட்பாளர்களுக்கு வாக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தவெகவின் மரகதம் குமரவேலுக்கு திருப்போரூரிலும், திமுகவின் பரந்தாமனுக்கு எழும்பூரிலும், அதிமுகவின் கணிதா சம்பத்திற்கு செங்கல்பட்டிலும், சிபிஎம்-ன் சுகந்திக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும் வாக்கு உள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஜானகி ராமன் மட்டுமே இத்தொகுதியில் வாக்கு செலுத்த உள்ளார்.


 

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 5 முனைப் போட்டி நிலவுவதால் யாருக்கு வெற்றி சாதகமாக இருக்கும் என்பதைக் கணிப்பதே கடினமாக இருக்கிறது.

இந்நிலையில் வேட்பாளர்கள் 5 பேரில் 4 பேருக்கு மதுராந்தகம் தொகுதியில் ஓட்டு இல்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.

1. தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு திருப்போரூர் தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.

2. திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு சென்னை எழும்பூர் தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.

3. அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு செங்கல்பட்டு தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.

4. சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.

இதன் காரணமாக இந்த 4 வேட்பாளர்களால் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியாது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனுக்கு மட்டுமே மதுராந்தகம் தொகுதியில் வாக்குரிமை இருப்பதால், அவர் மட்டுமே இன்றைய இடைத்தேர்தலில் வாக்கு செலுத்துவார்.